Saturday 12 November 2011

உங்கள் "சாய்ஸ்" !!


அது ஒரு ஞாயிற்றுகிழமை. விருதுநகர் அருகே உள்ள கிராமத்தில் என் சொந்தபந்தங்களுடன் வீட்டு திண்ணயில் பொழுதை கழித்துக்கொண்டிருந்தேன். "ஞாயிற்றுகிழமை னா இரண்டு !!" ஆயிற்றே. (ஆமாம். தினமலர் செய்தித்தாளை தான் நானும் குறிப்பிட்டேன். ;) ) அன்று செய்தித்தாளுடன் இணைப்பாக வந்த வாரமலரில் இருந்த குறுக்கெழுத்து போட்டியுடன் போராடிக்கொண்டிருந்தேன்.


அதில் ஒரு வினா. "மேலிருந்து கீழ்: 3. பெப்சி கம்பெனியின் CEO (7) ". சற்று குழம்பித்தான் போனேன். அவர் பெயர் இந்திரா என்று நியாபகம் இருந்தது. ஆனால் அவரின் குடும்பபெயரை மறந்துவிட்டேன்.


எதிரில் ஊர் பெருசு ஒருவர் தென்பட்டார். அவரிடம் இந்த கேள்வியை கேட்டேன். (கிராமத்தில் ஊர் பெருசுகள் அனைவரும் உலக விஷயங்களை கரைத்துகுடித்திருப்பார்கள் என்ற நம்பிக்கை தான் !!. அதற்கு தானே திண்ணைகள்  பயன்படுகின்றன !! தவறான நபரிடம் தவறான கேள்வியை கேட்டுவிட்டோமோ என்று ஒரு கணம் தோன்றியது. கேட்டுத்தான் பார்ப்போமே என்று அசட்டுத்தைரியம். )


அவர் சற்றும் அசரவில்லை. உமா என்று சொல்லிவிட்டு அசடு வழிய சிரித்தார். எனக்கு அப்படியே தூக்கிவாரிப்போட்டது.


நான் சுதாரிப்பதுக்குள் அவரே தொடர்ந்தார். "என்ன தம்பி! நம்ம பெப்சி உமா வ தானே சொல்ரீக. டிவில வந்து புது பாட்டா போடுமே ! அந்த புள்ள தான ! நல்ல செக்கசெவேர்னு ! சே ! இப்பொல்லாம் அந்த புள்ள வர்ரதே இல்ல.! " என்று புலம்பியவாரே நடையை கட்டினார்.


(விவரம் அறியாத நண்பர்களின் கவனத்திற்க்கு, "பெப்சி உமா-சிறு குறிப்பு வரைக !! பெப்சி உமா, "பெப்சி உங்கள் சாய்ஸ்" என்ற நிகழ்ச்சியை பல காலமாக தொகுத்து வழங்கியவர். விடாமுயற்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லி கொடுத்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இவரின் தாரக மந்திரமான "keep trying. keep on trying" அதற்கு சாட்சி ;) தமிழ்நாட்டில், குஷ்புக்கு அடுத்தபடியாக இவருக்கு தான் கோவில் கட்டுவதாக திட்டம். என்ன காரணத்திலோ, அது கைவிடப்பட்டது :'(:'( " )


பெப்சி உமாவுக்கு இத்தனை ரசிகர்களா என்ற வியப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அதையும் தாண்டி ஏதோ ஒன்று மனதை நெருடிக்கொண்டிருந்தது. "பெப்சி உங்கள் சாய்ஸ் " ஏன் ! ஒரு நிகழ்ச்கியின் பெயரை ஆங்கிலம் கலக்காமல் வைக்க முடியாதா !


அரசின் வரிவிலக்குக்காக சொல்லவில்லை! கூடுதலாக ஒரு தமிழ் வார்த்தையை கற்று கொள்ளலாமே என்ற ஆர்வத்தில் தான் கேட்கிறேன். சரி ! இந்த "சாய்ஸ்' என்ற வார்த்தைக்க்கு வருவோம். இதன் தமிழாக்கத்தை தெரிந்து கொள்ள முயற்ச்சித்துக்கொண்டு இருக்கிறேன். "தேர்வு, தேர்ந்தெடுத்தல் ". இவையே நான் பெற்ற பதில்கள்.


"select" என்பதன் தமிழாக்கம் தானே "தேர்வு" ! ஆக, நான் இன்னும் என் "சாய்ஸ்" ஐ தேடிக்கொண்டு தான் இருக்கிறேன். நீங்களும் உங்கள் "சாய்ஸ்" ஐ தேடிப்பாருங்கள். இது போல், நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் ஆங்கில வார்த்தைகளின் தமிழாக்கத்தை தெரிந்து கொள்ள முயற்ச்சிக்கலாமே ! நம் தமிழ் புலமையும் பெருகும். நம் மொழியும் நம்முடன் சேர்ந்து முன்னேறும். நம் மொழியை நாமே பேசாவிட்டால், வேறு யார் பேசுவார்கள் !!


தமிழ் பேச மறுக்கும் இந்த தலைமுறையினர் வைக்கும் குற்றச்சாட்டு இது தான் "நாங்கள் உபோயொகிக்கும் பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டு இறக்குமதியே ! அவர்கள் ஆங்கிலத்தில் இடும் பெயரைத்தானே உபயோகிக்க முடியும் !!"


வெளிநாட்டு பொருட்களின் மீது இத்தனை ஆர்வம் காட்டும் நம்மால் ஏன் அதன் தமிழாக்கத்தை தெரிந்துகொண்டு அதை பயன்படுத்த முடிவதில்லை!! முடிந்தவரை தமிழாக்கத்தை தேடிப்பார்ப்போம். கிட்டாவிட்டால், நாமே அதன் தமிழாக்கத்தை உருவாக்குவோம்.


தவறேதும் இல்லை தோழர்களே ! ஆங்கில மற்றும் வெளிநாட்டு மோகத்தில், தமிழை மறவாது இருப்பது நம் பொறுப்பு. காலத்திற்கு ஏற்றவாரு தன்னை மாற்றி கொள்வதே தமிழின் சிறப்பு! ஆக, முடிந்தவரை தமிழ் வார்த்தைகளை கொண்டே பேசுவோம். எவ்வளவோ பண்ணிட்டோம்! இத பண்ண மட்டோமா!!


முயற்ச்சிப்போம் தோழர்களே!! :):) இம்முயற்சியின் முதல் கட்டமாக, பெப்சி நிறுவனத்தின் ''CEO" வான இந்திரா நூயி, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பொறுப்பெற்கிறார்.

`